×

பேருந்துகள் நிற்காமல் செல்வதை கண்டித்து நடந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ்

 

அவிநாசி, மே 1: அவிநாசி அருகே தெக்கலூரில் பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்வதை கண்டித்து நடத்திய காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு தனியார் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்களை நடத்துனர் பாதி வழியிலேயே இறக்கி விட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த தெக்கலூரை சேர்ந்த கிராம மக்கள் இரு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் கோரிக்கையை மனுவாக அளிக்குமாறு தெரிவித்தனர். இந்நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் தெக்கலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதையடுத்து, அவிநாசி தாலூகா அலுவலகத்தில் நேற்று மாலை இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தாசில்தார் மோகனன், அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தெக்கலூர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுமக்களின், அனைத்து கோரிக்கைகளும் ஒரு வார காலத்துக்குள் நிறைவேற்றப்படும். தொடர்ந்து அனைத்து பேருந்துகளும் தெக்கலூருக்குள் வந்து நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெக்கலூரில் பஸ் ஸ்டாப்பில் நிற்காத பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post பேருந்துகள் நிற்காமல் செல்வதை கண்டித்து நடந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Thekkalur ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கி 3 மாடுகள் பலி